தன்னிடம் கற்ற மாணவர்களுக்கு தீவிரவாதத்தை போதித்ததாக கூறி கைது செய்யப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டமா அதிபர் முன்வைத்த சாட்சியங்கள் ஊடாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது போயிருப்பதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில் சிலாவத்துறை பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைதானார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான காலகட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் கைது செய்யப்பட்டார்.
அஹ்னாப் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக நிரூபிக்க வழக்குத் தொடுநர் தரப்பு அல்லது அரச தரப்பு நீதிமன்றம் முன்னிலையில் கொண்டு வந்த சாட்சியாளர்கள் புத்தளம் மேல் நீதிமன்றின் தீர்ப்பின் ஊடாக அடிப்படையற்றதென தெரியவந்துள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்றில் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் இந்த வழங்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.