கிழக்கு மாகாணம் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தவர்களால் தமிழ் மக்களின் 7 ஆயிரம் கால்நடைகள் இதுவரை அளிக்கப்பட்டதாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன் கவலை தெரிவித்துள்ளார்
யாழ் சங்கிலியன் பூங்காவில் இடம் பெற்ற வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சிக் கோரிக்கையின் (சமஷ்டி)தோற்றம் தொடர்பான கண்காட்சி மற்றும் வரலாற்று தெளிவூட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
தமிழ் மக்களின் பூர்வீக மேய்ச்சல் தரையான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலங்களை எமக்கு அறிந்தவகையில் 1972 ஆம் ஆண்டு தொடக்கம் பயன்படுத்தி வருகிறோம்.ஆனால் 2012 க்கு பின்னர் எமது மேய்ச்சல் நிலங்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் அடாத்தாக அபகரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்தப் பகுதிக்கு செல்வதற்கு எமது மக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் பகுதியில் சுமார் 982 பணியாளர்கள் சுமார் 3000 பண்ணைகளை தமது வாழ்வாதாரத்துக்காக செயல்படுத்தி வரும் நிலையில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் புற்தரைகள் பெரும்பான்மை இனத்தவர்களால் நஞ்சு விசிறி அழிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் வாழும் பண்ணையாளர்கள் தமது வாழ்வாதார தொழிலாக பண்ணைத் தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை சுமார் 7ஆயிரம் கால்நடைகள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுமுள்ளன.
எமது கால்நடைகள் அழிக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை எவ் விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் எமது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டுமானால் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வே அதற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.