ஒவ்வொரு வருடமும் தீபாவளி பருவ காலத்தில் மாத்திரம் அட்டன் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாள் ஒன்றுக்கு பத்து தடவைகளாவது மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
இது ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகும். மேலும் தமிழர் பண்டிகையை கொண்டாட முடியாது இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன என அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் டாக்டர் அ.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
இம்முறையும் வழமை போலவே கடந்த திங்கட்கிழமையிலிருந்து நாள் ஒன்றுக்கு பத்து தடவைகளுக்கும் மேல் அட்டன் மற்றும் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அட்டன் மின்சார சபை காரியாலயத்துக்கு தொடர்பு கொண்டால் தொலைபேசிக்கு எவரும் பதில் தருவதில்லை. அப்படியும் பதில் கூறுபவர்கள் மழையை காரணம் காட்டுகின்றனர். இவ்வருடத்தின் மார்ச் மாதத்திலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை காலநிலையே நிலவுகிறது.
அப்போது துண்டிக்கப்படாத மின்சாரம் எவ்வாறு தீபாவளி காலத்தில் துண்டிக்கப்படுகின்றது? கொட்டகலைப் பகுதியில் பாரிய திருத்தவேளை ஒன்று இடம்பெறுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைகளின் கோரிக்கைக்கு இணங்கவே தாம் மின்சாரத்தை துண்டிப்பதாகவும் தற்போது கூறுகின்றார்கள்.
குறித்த அதிகார சபை அதிகாரிகள் ஏன் இந்த பணிகளை தீபாவளி காலத்தில் செய்ய வேண்டும்? இது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடேயன்றி வேறொன்றும் இல்லை. திங்கட்கிழமையன்று மாலை 6 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நகரங்களில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த பலர் செல்லிடப்பேசிகளையும் பணத்தையும் திருடர்களிடம் பறிகொடுத்துள்ளனர். மின்சார சபை இவ்வாறு திருடர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கின்றதா என்று தான் கேட்க வேண்டியுள்ளது.