நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை புதிய முதலீடுகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறுப்பாக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.
நுவரெலியா தபால் நிலையத்துக்கு பொருத்தமான பிறிதொரு கட்டடத்தை வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ள தபால்மா அதிபர் எம்.ஆர்.ஜி.சத்குமார சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு (8, 9, 10 ஆகிய திகதிகள்) இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆகவே, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் சகல சேவையாளர்களும் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, தபால் திணைக்கள சேவையாளர்களின் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தபால் திணைக்கள தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்க தீர்மானித்துள்ள 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு தொடர்பில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது தபால் திணைக்களத்துக்கு சொந்தமான தபால் கட்டடங்களை விற்பதற்கும், தனியார் மயப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் உறுதியளித்தார்.
அரசாங்கத்தின் கொள்கைக்கமைய, நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை புதிய முதலீடுகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறுப்பாக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.
அத்துடன், நுவரெலியா தபால் நிலையத்துக்கு பொருத்தமான பிறிதொரு கட்டடத்தை வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
7.0 பில்லியன் ரூபாய் நட்டமடைந்த தபால் திணைக்களத்தின் வருடாந்த நட்டம் இந்த ஆண்டு 3.0 பில்லியன் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவது முறையற்றது.
ஆகவே, பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தவிர்த்து சகல சேவையாளர்களும் சேவைக்கு சமுகமளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கமைய சகல தபால் சேவையாளர்களின் விடுமுறையும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் இந்த வேலைநிறுத்தமானது கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், பூநகரி, கிளிநொச்சி ஆகிய பிரதான தபாலகங்கள் மூடப்பட்டு எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புராதன தபாலகங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி பிரதான தபாலகம் பரந்தன் பிரதான தபாலகம் மற்றும் பூநகரி பிரதான தபாலகம் ஆகியன மூடப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாதாந்த உதவி கொடுப்பனவை பெற வருவோர் மற்றும் தபால் சேவைகளை பெற்றுக்கொள்ள வருவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா
கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்துக்கு எதிராகவே நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் இன்று (08) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.