தமிழ்த் தேசிய இளையோரை இலக்கு வைக்கும் அரசாங்கம்

Share

தமிழர்களின் புனித மாதமான கார்த்திகை மாதத்தில் எமது இளைஞர், யுவதிகளை குறிவைத்து விசாரணைகள் முடக்கி விடப்படுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தற்போதைய நாட்கள் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானவை என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்

அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா அரசாங்கம் இளைஞர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் கைது செய்து அவர்களை குற்றப்புலனாய்வு மற்றும் இராணுவப் புலனாய்வு ஊடாக விசாரணை என்ற பெயரில் மிக மோசமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அதனுடைய ஒருகட்டமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையினுடைய ஆசிரியர்,ஊடகவியலாளர்கள் உட்பட வெளியில் இருக்கின்ற பலரை ஸ்ரீலங்கா அரசு விசாரணை என்ற பெயரில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதை அண்மைய காலப்போக்குகள் காட்டி வருகின்றன.

மேலும் அதேபோல தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்ற துயிலும் இல்லங்களின் பணிக்குழு தலைவர்களையும் ஸ்ரீலங்கா புலனாய்வாளர்கள் விசாரணைக்கு அழைத்து வருகின்றார்கள். இதுபோல் ஏனைய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அண்மைக்காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இது அரசாங்கத்தினுடைய கையாலாகாத தனத்தை காண்பிக்கின்றது.

குறிப்பாக கார்த்திகை மாதம் என்பது தமிழர்களது உணர்வோடு சேர்ந்த மாதம், தமிழீழத்தில் தங்களுக்காக தங்களுடைய இன்னுயிர்களை மண்ணுக்காக தியாகம் செய்தவர்களை நினைவில் கொள்கின்ற மாதம் அவ்வாறான கார்த்திகை மாதத்திலே பல்லாயிரம் மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கான நினைவேந்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றபோது அவற்றை அச்சுறுத்தம் வகையில்தான் அரசாங்கம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றது.

தான் ஒரு லிபரல்வாதி என அடையாளம் காட்டிக்கொள்கின்ற இந்த நாட்டினுடைய ஜனாதிபதி நிலைமாற்று காலநீதிப்பொறிமுறையின் அடிப்படையில் வணக்கங்கள் செலுத்துவதற்கு தடையில்லை என கூறிக்கொண்டு அண்மைய நாட்களில் அமெரிக்காவிற்கு சென்று “அங்குகூட நான் எல்லா வணக்க முறைகளுக்கும் வாசலை திறந்து விட்டிருக்கின்றேன்.தமிழ் மக்களை அரவணைத்து செல்கின்றேன்”என்று சொல்கின்ற ஜனாதிபதியினுடைய பாதுகாப்புத் துறையின் படைகளும் மிக மோசமாக இளைஞர்களையும் யுவதிகளையும் ஊடகவியலாளர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் விசாரணைக்கு அழைத்திருப்பதென்பது ஒரு பயங்கரமான செயற்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த நாட்டினுடைய ஜனநாயகம் மரணித்து, நீதி மரணித்து நாடு ஒரு சிங்கள பௌத்த இனத்துக்குரிய ஒரு நாடாக, அல்லது அவர்களால் கையாளுகின்ற ஒரு நாடாக ஏனைய இனங்கள் வாழமுடியாத பன்முகத்தன்மையில்லாத ஒரு நாடாக தன்னை அடையாளப்படுத்தி செல்வதையே அண்மைக்காலப் போக்குகள் மிகத் தெளிவாக காட்டுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு