ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இலங்கையில் பாதாள உலகக் குழுக்களை இயக்கும் ஹீனடியான மகேஷின் நெருங்கிய நண்பரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
டி-56 துப்பாக்கி, 100க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், மேலும் ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு போலி வாகன பதிவு பலகைகளுடன் 25 வயதான குறித்த நபரை விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 06) கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பில் தந்தை மற்றும் மூன்று மகன்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட மேல் மாகாணத்தில் பல கொலை சம்பவங்களுக்கு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள இந்த துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொனஹேன முகாமில் கடமையாற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.