அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மலையக பெருந்தோட்ட மக்கள் தீபாவளி பண்டிகையைக்கூட கொண்டாட முடியாத சூழலில் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள பெருந்தோட்ட மக்கள் விடயத்தில் ஜனாதிபதியும் வர்த்தக அமைச்சரும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு வெளியிடடுள்ள அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய பாதிப்பை சந்தித்துள்ளவர்கள் மலையக மக்களே. அதற்கு காரணம் தற்பொழுது மலையக பகுதிகளில் வருமானம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளது. அதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன.
இவ்வாறான ஒரு நிலையில் தீபாவளி பண்டிகை எதிர்வரும் 12ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பன்மடங்காக அதிகரித்துள்ளன.
மலையகத்தின் பல பகுதிகளில் ஒவ்வொரு வர்த்தக நிலையத்திலும், வெவ்வேறு விலைகளுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலை ஒன்றை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும்.
விலையேற்றம் தொடர்பில் பொது மக்கள் வியாபார நிலையங்களில் வினவினால் செய்தி கேட்பதில்லையா வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதில் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் 18 வீத வரியை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாகவே அறிவித்துள்ளது. ஆனால், அந்த வரி தற்பொழுதே அதிகரிக்கப்பட்டுவிட்டது போலவே வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பதில் வழங்குகின்றார்கள்.
இது தொடர்பிலும் அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இதன் மூலம் பாதிக்கப்படுவது பொது மக்களே. எனவே, இது தொடர்பாக நுகர்வோர் அதிகார சபையும் மாவட்ட செயலாளர்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மலையகப் பகுதிகளில் வசிக்கின்ற ஏனையவர்களும் தங்களுடைய வருமானத்தை இழந்த வறுமை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, போனஸ் கொடுப்பனவுகள் தொடர்பாக எந்த ஒரு பெருந்தோட்ட நிறுவனமும் இதுவரையில் தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறான ஒரு பொருளாதார நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்தது 20,000 ரூபா தீபாவளி முற்பணமாக வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாகவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.