அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 31 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது சக ஊடகவியலளார்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையேயான ரத்தப் போர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்தான் அரசு, ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது.
ஆனால், இன்னும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு முடிவையும் இஸ்ரேல் எடுக்கவில்லை. செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் முதல் அப்பாவி குழந்தைகள் வரை இந்தக் கொடூரத் தாக்குதலில் பலியாகி வருகின்றனர்.
‘போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது அப்பாவி மக்களின் உயிருக்கு விடுத்த சவாலாகவே பார்க்கப்படுகிறது.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 31 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என ‘தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல்’ என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதை பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (The Committee to Protect Journalists) உறுதி செய்துள்ளது. இந்த 31 ஊடகவியலாளர்களில் 26 பலஸ்தீனியர்கள், 4 இஸ்ரேலியர்கள் மற்றும் 1 லெபனான் பத்திரிகையாளர்கள் அடங்குவர்.
இது தவிர, ஊடகவியலாளர்களில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் காணாமலோ அல்லது சிறைபிடிக்கப்பட்டோ உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா (358), கிரேட் பிரிட்டன் (281), பிரான்ஸ் (221) மற்றும் ஜெர்மனி (102) ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களை இதுவரை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளன.
ருமேனியா, அர்ஜென்டினா, நேபாளம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இஸ்ரேல் போர் தொடர்பான செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களை அனுப்பியிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த அல்ஜசீரா ஊடகத்தின் காஸா பிரிவு செய்தியாளர் வல் அல் ததோ (Wael al-Dahcouh) தனது குடும்பத்தினரின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு, அடுத்த நாளே தன்னுடைய பணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.