‘மலையகம் 200‘ கண்காட்சியினை கிழக்கு மாகாணத்திற்குரிய நிகழ்வாக கல்முனையில் நவம்பர் மாதம் 02ஆம், 03ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “இலங்கையில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், உதவிகள், அபிவிருத்திகளை போன்று மலையக தமிழ் மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். காரணம் இலங்கையின் தேசிய வருமானத்திற்கு மிக முக்கிய பங்கினை வழங்குகின்றார்கள். இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். ” என்பதற்கான ஒரு ஆதரவு நிகழ்வாக இது நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சியினை சமூக அபிவிருத்தி நிறுவகம் (ISD) , அம்பாறை மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்த உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒன்றியம் (TRF) ஆகியன இணைந்து நடத்துகின்றன.
‘மலையகம் 200‘ கண்காட்சி தொடர்பில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்த கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மேலும் தங்களது கருத்தில்,
” இலங்கையில் மலையக மக்களின் வாழ்வியல் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டியுள்ளது.
மலையகத் தமிழரின் 200 வருடகால வாழ்வியல் பார்க்கும்போது அவர்கள் இலங்கையில் வாழும் ஏனைய மக்களை விட மிகவும் வாழ்வியல் வரலாற்றினை பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இக் கண்காட்சி நிகழ்வில் மலையகத் தமிழரின் வாழ்வியல் வரலாற்று ஆவணங்கள், பொருளாதார, கலை, கலாசார, அரசியல் மற்றும் சமூகவியல் தொடர்பான விடயங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந் நிகழ்வானது மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாற்றினை பிரதிபலிக்கும் நிகழ்வாக அமையவுள்ளது.
இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்தின மக்களும் தவறாது கலந்து கொண்டு அவர்களின் வாழ்வியல் வரலாற்று விடயங்களை அறிந்து தங்களது ஆதரவினையும், ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
மலையகத்தில் தோட்டங்களில் பெண்களே அதிகமாக தொழில் செய்கின்றார்கள். இவர்கள் பால் நிலை சார்ந்த பல பிரச்சினைகளையும் சொல்ல முடியாத துயரங்களையும் அனுபவிக்கின்றனர். இவர்களின் பிரச்சினைகள் ஏனையவர்களைப் போல் அதிகமாகப் பேசப்படுவதில்லை இவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சிறுவர் தொழில் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
இம் மக்களின் அடக்குமுறை வாழ்க்கை மாற்றப்பட்டு அரசாங்கம் தனி தனியான காணிகளையும், வீடுகளையும் வழங்க வேண்டும்.
இதுவே அம்மக்களின் அடிப்படை தேவையாகவும் உள்ளது. அதே போன்று அவர்களுக்கான சுகாதார, மருத்துவ சேவைகளும், கல்வி அபிவிருத்திகளும் முறையாக கிடைப்பதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுப்பது மிக மிக அவசியமாகும். ” என தெரிவித்தனர்.