சமகாலத்தில், இலங்கையை பௌத்தரூபவ் சிங்கள நாடாக மற்றும் பிரகடனப்படுத்துவதற்கான கடும்போக்கு ஆக்கிரப்பு நடவடிக்கைகள் தொடர்வதன் காரணமாக உள்நாட்டில் மீண்டும் வன்முறைகள் ஏற்படுவதற்கான ஆபத்தான நிலைமைகள் உள்ளதென ஐரோப்பிய ஒன்றியக் குழுவினரிடத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிக் குழுவினருடன் நேற்று செவ்வாய்க்கிழமை (31) நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருடன் முக்கியமானதொரு சந்திப்பில் பங்குபற்றியிருந்தேன்.
அந்தச் சந்திப்பின்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக பல்வேறு முக்கிய விடயங்களை அவர்களுக்கு எடுத்துரைத்திருந்தேன்.
குறிப்பாக, இலங்கை அரசாங்கம், திட்டமிட்ட வகையில் நாட்டை பௌத்த, சிங்கள நாடாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்காக, பௌத்த தேரர்கள் மற்றும் இதர அரசாங்க கட்டமைப்புக்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
விசேடமாக, காணிகளை அபகரித்தல், பௌத்த அடையாளங்களை மையப்படுத்தி ஆக்கிரமித்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் காரணமாக இனங்களுக்கு இடையில் பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் தோன்றுவதோடு இனமுறுகல்கள் அதிகரித்துச் செல்வதற்கான சூழல்களே நீடிக்கின்றது.
அதேநேரம், உள்நாட்டில் தொடர்ச்சியாக இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குதல் ரூபவ் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படும் முயற்சிகள் ஆகியவற்றில் பிற்போக்கான நிலைமைகள் காணப்படுவதன் காரணமாக, வடக்கு, கிழக்கினை பூர்வீகமாகக் கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலைமைகளானது, தமிழ் மக்களை வலிந்து ஏதிலிகளாக்கும் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் ஆவர்.
அவர்கள் சுயநிர்ணய உரிமை உரித்துடையவர்கள். அவர்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடியவாறான அதிகாரங்களைப் பகிரவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஆனால், அரசாங்கம் இனங்களுக்கு இடையிலான தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வமில்லாத நிலையில் உள்ளதோடுரூபவ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் இழுத்தடிப்புக்களைச் செய்கின்றது.
மேலும், பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும், அரசாங்கம் திருப்திகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. ஆகவே, இவ்வாறான சூழல்கள் தொடருகின்ற பட்சத்தில் மீண்டும் நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதற்கான ஆபத்தான நிலைமைகளே நீடிக்கின்றன.
எனவே, அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உரிய அழுத்தங்களை பிரயோகிப்பதோடு, நீண்டகாலம் நீடித்து வருகின்ற இனங்களுக்கு இடையிலான தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வினை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய சமூகத்தினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனான ஒத்துழைப்புக்களையும் உரிய அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும். அவ்வாறு அரசாங்கம் முற்போக்கான செயற்பாடுகளை நடைமுறையில் பின்பற்றுகின்றபோது தான்,பொருளாதார ரீதியிலும் மேம்பட்ட சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்றார்.