கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பற்களின் அடிப்படையில் வயது நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மாவட்ட வைத்தியசாலையின் உடற்கூறாய்வு நிலையத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நாங்கள் அவற்றின் பற்களை எக்ஸ்ரே எடுத்து அவர்களின் வயதை அனுமானிக்க உத்தேசித்துள்ளோம்.
இந்த பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பல் சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளோம். இனிவரும் காலங்களில் எக்ஸ்ரே எடுத்து முடிந்த பின்னர் அவர்கள் வந்து நேரடியாக இந்த எலும்புக்கூட்டுத் தொகுதியை பரிசோதிக்கும்போது நாங்களும் கூடவே இருந்து எங்களுடன் தொடர்புடைய விடயங்களை கையாள்வோம்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நவம்பர் 20ஆம் திகதியிலிருந்து மீள ஆரம்பிக்க ஒக்டோபர் 30ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்கால அகழ்வு பணிகளுக்காக சுமார் 25 இலட்சம் ரூபாய் நிதி எஞ்சியுள்ளது” என தெரிவித்தார்.
இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,
“அனைத்து எலும்புக்கூடுகளையும் அகழ்ந்து எடுத்ததன் பின்னர் அதுத் தொடர்பில் ஆராய்ந்து, இதுத் தொடர்பிலான தீர்மானம் வெளியிடவுள்ளது.
முடிவுகளை பொறுத்தவரையில் இவ்வாறான சிறு சிறு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மீட்கப்பட்ட எலும்புபக்கூடுகளின் எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டுவிட்டன. நாங்கள் கிடங்கில் உள்ள எலும்புக்கூடுகளை முழுமையாக எடுப்போம், அதன் பின்னர் ஆராய்ந்து முடிவுகளை சொல்வதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.