இலங்கையில் உள்ள பிக்குகள் மற்றும் தமிழ் மக்கள் மீது இரண்டு வழிகளில் சட்டம் பயன்படுத்தப்படுவதாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவர் மீதும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனினும் கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்புக்கான வருகை தொடர்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையின் மீது தாக்கிய அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், ஜனாதிபதியை கடுமையான வார்த்தைகளால் திட்டியமைக்கான காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
மட்டக்களப்பு ஊடகவியலாளர்களிடம் விசாரணை
அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்டதுடன், அவர்களின் பொருட்களையும் உடைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இந்த நாட்டில் உள்ள பிக்குகளுக்கு ஒரு சட்டமும் தமிழ் மக்களுக்கு இன்னொரு சட்டமும் பின்பற்றப்படுகிறதா? என தமிழ் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டிருந்த ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
மட்டக்களப்பு ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி மற்றும் வி.கிருஷ்ணகுமாரிடம் பொலிஸார் 2 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக தமிழ் விவசாயிகள் போராட்டம் கடந்த 8ஆம் திகதி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனை செய்தியாக வெளியிட்ட ஊடகவியலாளர்களிடமே பொலிஸார் இவ்வாறு வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.
செங்கலடி மகா வித்தியாலயத்தின் 149ஆவது ஆண்டு விழாவிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார்.
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
மயிலத்தமடு – மாதவனே, மேய்ச்சல் தரைநிலங்களை வலுக்கட்டாயமாக சுவீகரித்தமைக்கு எதிராக பாற்பண்ணையாளர்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் பின்புலத்திலேயே ஜனாதிபதியின் இந்த விஜயம் இடம்பெற்றது.
அங்கு போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி தாக்குதல் நடத்தி வெளியேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமன ரத்ன தேரரின் நடவடிக்கைகள் குறித்து சுமந்திரன் கேள்வி
தமிழ் மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக பொலிஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே சுமந்திரன் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சுமன ரத்ன தேரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை அவர் மிகவும் வெறுப்பூட்டும் வகையில் திட்டிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
அத்துடன், தெற்கில் வாழும் தமிழ் மக்களை துண்டு துண்டாக வெட்டுவது ஒவ்வொரு சிங்களவரின் பொறுப்பு எனவும் சுமன ரத்ன தேரர் தெரிவித்திருந்தார்.
ICCPR சட்டம் 2007 இன் 3(1) மற்றும் (2) பிரிவின் கீழ் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தண்டனைக்குரியது எனவும் சுமந்திரன் எம்.பி பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.