வவுனியாவில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் நிர்வாக கூட்டத்தில் கைகலப்பு ஏற்படவில்லை, மாறாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே சரியானது என குறித்த சங்கம் விளக்கமளித்துள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் கூட்டம் வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (25) நடத்தப்பட்டபோது இரு தரப்பினரிடையே முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பு வரை சென்று எழு பேர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் முரண்பாடு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில்,
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கமானது எட்டு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தை ஸ்தாபித்து அவர்களை நிர்வாகித்து வரும் ஒரு தாய் அமைப்பாகும்.
வவுனியா மாவட்டத்தின் செயலாளராகவும் எட்டு மாவட்ட நிர்வாகத்தின் பொருளாளராகவும் இருந்தவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் நிர்வாகத்தில் தெரிவுகளை மேற்கொள்வற்காக கடந்த ஒக்டோபர் 25ம் திகதி பொதுக்குழு கூட்டம் நடாத்தி நிர்வாகம் தெரிய உள்ளதை ஊடகச் சந்திப்பு மூலம் தெரியப்படுத்தியிருந்தோம்.
கூட்டம் நடாத்துவதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தை பணம் செலுத்தி பதிவுசெய்து இருந்தோம். வவுனியா மாவட்ட தலைவியும் நேரத்துடன் வந்த உறவினர்களும் மண்டபத்திற்கு உள்ளே சென்று இருந்தனர்.
அப்போது கூட்டத்திற்கு என வந்த சிலர் வவுனியா மாவட்ட தலைவிக்கு போன் செய்து தம்மை மண்டபத்தினுள் வரவிடாது சிலர் கேட் அடியில் நின்று துரத்துவதாக கூறினர்.
அதைக்கேட்ட தலைவி, குறித்த உறவுகளை அழைத்து வருவதற்காக வெளி வாசலுக்கு சென்ற போது அங்கு நின்றவர்கள் தலைவிக்கு தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தினர். அவர் கீழே விழுந்து விட்டார்.
நடந்து வந்து கொண்டிருந்த நிர்வாக உறுப்பினர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தை கண்ணுற்று, காப்பாற்றுவதற்காக வேகமாக சென்றபோது தகாத வார்த்தைகளால் பேசிய படி எம்மை நோக்கி வந்து எட்டு மாவட்டத்தின் தலைவி மீது தாக்குதல் நடத்த, மற்றவர்கள் எட்டு மாவட்டத்தின் செயலாளர் மற்றும் உபசெயலாளர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
அனைவரும் மூர்க்கத்தனமாக அம்மூவரையும் வெளி வாசலுக்கு வெளியில் பாதையில் வைத்தே தாக்கினர். இதில் தலைவியின் வயது 63, செயலாளர் 71 வயதும் ஆன வயோதிபத்தாய்மார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் அன்றைய தினம் நிர்வாக கூட்டத்தில் கைகலப்பு ஏற்படவில்லை, மாறாக வவுனியா மாவட்டத்தின் உறவுகளின் அழைப்பை ஏற்று நிர்வாக தெரிவிற்காக சென்றிருந்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே சரியான விளக்கம் ஆகும்.
எட்டு மாவட்டத்தின் தலைவியும் அதன் செயலாளரும் கிளிநொச்சியில் பல காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை இணைத்து 20/02/2017 இல் தொடர் போராட்டத்தினை தொடங்கினர்.
பின் இப்போராட்டமானது தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களையும் இணைத்து நிர்வாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று ஜெனிவா, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம், இங்கிலாந்து நாடாளுமன்றம் என தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை கொண்டு சென்றதுடன் தூதரக அதிகாரிகள் தாமாகவே தேடிவந்து சந்திப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து நீதிக்கான பயணத்தில் முன்னேறியுள்ளது.
இந்த சங்கம் பலப்படுவதும், தமிழ் மக்களின் நீதி தேடும் பயணம் வளரக்கூடாது என்பதிலும் பல சக்திகள் முனைப்புடன் செயல்படுவதை நாம் அறிவோம்.
ஆனாலும் எமது நீதி தேடும் பயணம் எத்தடைகளையும் தாண்டி பயணிக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது எட்டு மாவட்ட நிர்வாகமும் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு, புதிய உத்வேகத்துடன் எமது நீதிக்கான போராட்டம் தொடரும் என்பதனை சகலருக்கும் உறுதிபடத் தெரிவிக்கின்றோம்.
இதில் அனைவரினதும் பங்களிப்பினையும், ஆதரவினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம் – என்றுள்ளது.