அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது குறித்து பொது மக்கள் முன்னணி ஆலோசனை நடத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவின் பின்னர், இது தொடர்பில் தீர்மானத்தை எடுப்பது குறித்தும் அக்கட்சி கலந்துரையாடியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்றும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் எனவும், நிவாரணம் கிடைக்காவிடின் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்கு பொதுஜன பெரமுனவின் சார்ப்பில் கடுமையான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் பின்புலத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.