தமிழக முகாம்களில் நாடற்றவர்களாக உள்ளவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர்களின் நலன்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் உயர்மட்டக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் இரா.இளம்பரிதி தெரிவித்தார்.
தமிழ்நாடு- கோயம்பத்தூரில் ‘மலையகம் 200’ என்ற தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு அண்மையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையிலிருந்து தமிழகத்தில் குடியேறி இங்கு அகதிகள் முகாம்களில் நாடற்றவர்களாக இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, இந்திய குடியுரிமைக் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இலங்கை தமிழர்களின் நலன்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் உயர்மட்டக் குழு தனது இடைக்கால அறிக்கையில் தமிழக முகாம்களில் நாடற்றவர்களாக உள்ளவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு பரிந்துரையை இந்திய மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளது.
இப்பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் சாதகமான முறையில் பரிசீலிக்குமானால் அகதிகள் முகாம்களில் நாடற்றவர்களாக இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, இந்திய குடியுரிமை கிடைக்கப்பெறும்.
குறித்த இடைக்கால அறிக்கையினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முகாம்களிற்கும் நேரடி விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள மக்களிடம் கலந்தாலோசித்து தரவுகளை பெற்று அதனை ஆய்வு செய்த பின்னரே குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இம்மாநாட்டில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
“தமிழ்நாட்டின் பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் குறித்து இந்திய மத்திய அரசு பாராமுகமாகவே செயற்படுகிறது. தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் வட சென்னை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர் கலாநிதி வீராசாமி தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் குறித்து டெல்லிக்கு மிகக் குறைந்தளவிற்கே புரிதல் உள்ளது” இந்த மலையகம் 200 மாநாட்டில் பங்குபெற்றிய இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் நாங்கள் இந்தியத் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படுகிறோம், இந்தியாவில் நாங்கள் சிலோன் தமிழர்கள் என்றழைக்கப்படுகிறோம், ஆனால் வருத்தமளிக்கும் வகையில் தமிழக அகதி முகாம்களில் இந்திய வம்சாவளி தமிழர்கள் சுமார் 30,000 பேர் நாடற்ற நிலையில் உள்ளனர்”. எனவும் கூறியிருந்தார்.
இந்திய நாடாளுமன்றத்தில் வட சென்னை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர் கலாநிதி வீராசாமி, தமிழக முதலமைச்சர் இந்த உயர்மட்ட குழுவின் அறிக்கையை ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும், முகாம்களில் உள்ளவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்துவதில் அவர் முனைப்பாக இருப்பதாகவும் இதன்போது வலியுறுத்தினார்.