கிழக்கிலங்கை ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றிவளைப்பு: செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் கவலை

Share

பொத்துவில், தம்பிலுவில், திருக்கோவில் என்று அம்பாறை மாவட்டத்தின் எல்லையிலிருக்கின்ற சைவப் பாடசாலைகளுக்கெல்லாம் மூடு விழா வைக்கக்கூடிய வகையில் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு வடக்கு- கிழக்கில் பல இடங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.கிழக்கிலங்கையை ஆக்கிரமிப்பாளர்கள் சுற்றி வளைத்திருக்கிறார்கள் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழா மேற்படி ஆச்சிரமத்தின் சிவபூமி அரங்கில் சிறப்புற இடம்பெற்ற போது
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

மட்டக்களப்பில் மாடுகள் கட்டி மண் சட்டியில் தயிர் செய்து அதனையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்கின்ற ஏழைத்தமிழ் மக்களின் தயிர்ச் சட்டிகளையும் உடைத்தெறியும் வகையில் அவர்களின் எஞ்சியிருக்கின்ற தரவை நிலங்களைச் சிங்களவர்கள் உழுகிறார்கள். எத்தனையோ ஏக்கர்களைக் கொண்ட அந்த மேய்ச்சல் தரவை நிலங்களை மட்டக்களப்பில் மாடுகள் பெரிய செல்வமாகக் காணப்படுவதாலும், பல்லாயிரக்கணக்கான மக்களின் நாளாந்த வாழ்வாதாரமாகவும் மாடுகள் காணப்படுவதால் தான் அந்த மக்கள் இதுவரை காலமும் உழவில்லை.

இதனை உணர்ந்து மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களை அப்படியே மடக்கி அந்த மக்களை இல்லாமல் செய்வதற்காக பெளத்தத் துறவிகள் வந்து குடியிருக்கத் தொடங்கி விட்டார்கள். நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்? என்பது தெரியவில்லை. நான் மட்டக்களப்பிற்கு அடிக்கடி போய் வருபவன் என்ற வகையில் தெரியும் வடக்கின் நிலை வேறு. கிழக்கின் நிலை வேறு.

அனுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயத்தில் நவராத்திரி காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து அறிஞர்கள் வருகை தந்து உரையாற்றியிருக்கின்றார்கள் என்ற செய்தியை நான் ஈழகேசரிப் பத்திரிகை மூலமாக வாசித்து அறிந்து கொண்டேன். குறிப்பாக 1965 ஆம் ஆண்டில் அந்தப் பாடசாலையில் நவராத்திரி விழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

அனுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயத்தைத் தற்போது முஸ்லிம் பாடசாலையாக மாற்றுவதற்குத் தினமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னொரு புறம் இந்தப் பாடசாலையைப் பெளத்தப் பாடசாலையாக மாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

கட்டுவனைச் சேர்ந்த ஒருவர் தான் கதிரேசன் கோயிலின் பூசகராக இருக்கின்றார். அவர் என்னிடம் தேடி வந்து சொத்துப் பறிபோகப் போகின்றதென வேதனையுடன் தெரிவித்தார். தற்போது அனுராதபுரத்தில் பிரதான வீதியில் பெரிய நிலத்துடன் விளங்கும் பாடசாலையாக விவேகானந்தப் பாடசாலை விளங்குகிறது.

அனுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயப் பாடசாலையின் நிலத்தை எப்படியாவது கையகப்படுத்திவிட வேண்டுமென்பதில் ஆர்வமாகவிருக்கிறார்கள். முன்னரும் ஒரு தடவை இப் பாடசாலையின் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவராக விளங்கிய கந்தையா நீலகண்டன் அப்போதைய
ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா அம்மையாரிடம் எந்தக் காரணம் கொண்டும் குறித்த பாடசாலையை வேற்றுச் சமயப் பாடசாலையாக மாற்றக் கூடாதென வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் தற்போது அனுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயப் பாடசாலைக்கு முஸ்லிம் அதிபரொருவரை நியமித்திருக்கிறார்கள் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு