மட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியில் இன்று மாலை பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டது.
இருயபுரம் கிழக்கு பகுதியிலுள்ள பௌத்த மக்களின் மயான பகுதிக்குள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் வீடு உடைத்த சில கழிவுப்பொருட்களை கொட்டியுள்ளதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாலேயே இவ்வாறு பதற்றமான நிலை தோன்றியது.
குறித்த கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் மாநகரசபை ஆணையாளர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
என்றாலும், இன்று அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
சுமனரத்ன தேரர் குறித்த பகுதிக்கு இரு முச்சக்கர வண்டிகளில் தனது சகாக்களுடன் வந்து மக்களை அச்சுறுத்த முற்பட்டதாலேயே இவ்வாறு இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
நிலைமையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.