ஒன்பது வருடங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தினால் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட வயல் காணிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிப்பத்திரத்தின் அசல் ஆவணத்தைக் கோரி, போரினால் பாதிக்கப்பட்ட வன்னி விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு, பாண்டிக்குளம் சந்தியில் இருந்து மாந்தை கிழக்குப் பிரதேச செயலகம் வரை பேரணியாக வந்த வன்னிவிளாங்குளம் விவசாயிகள், 2014ஆம் ஆண்டு துவரன்குளத்தில் வயல் காணிகளை கையளித்து வழங்கப்பட்ட உறுதிப்பத்திரத்தின் அசல் ஆவணத்தை வழங்குமாறு பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
யுத்தம் காரணமாக வன்னி விளாங்குளம் மக்கள், தமது கிராம காணிகளையும், பாரம்பரிய விவசாய நிலங்களையும் கைவிட்டு உயிர் பாதுகாப்பிற்காக வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்ததாக, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
மீள்குடியேற்றத்தின் பின்னர், யுத்தத்திற்கு முன்னர் பாரம்பரியமாக பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளை துப்பரவு செய்து மீண்டும் விவசாயம் செய்ய ஆயத்தமான போது, குறித்த காணி வன இலாகாவுக்கு சொந்தமானது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக காணியினை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 2014ஆம் ஆண்டு, துவரங்குளம் பிரதேசத்தில், 58 குடும்பங்களுக்கு, தலா இரண்டு ஏக்கர் காணியை வழங்குவதற்கு, மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக ரவிகரன் தெரிவிக்கின்றார்.
ஆனால், தற்போது வரை வயல் காணிகளுக்கான உரிமத்தின் அசல் ஆவணம் விவசாயிகளுக்கு வழங்கப்படாமையால், விவசாயத்தில் ஈடுபட முயற்சிக்கும் அவர்களுக்கு, வனப் பாதுகாப்புத் துறையினர் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
போராட்டத்தின் முடிவில் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி பிரதேச செயலாளர் ஜெ.மயூரன் பெற்றுக்கொண்டதோடு, இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா, எஸ்.சிவமோகன், செயற்பாட்டாளர்களான பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்ததாக பிரதேச ஊடகவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.