வரவு – செலவுத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் தேர்தலொன்றுக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடையே கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதற்காகவே இந்த கோரிக்கையை பொதுஜன பெரமுன முன்வைத்துள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், எந்தவொரு அரசியல் கட்சியாலும் பெரும்பான்மை பெற முடியாது. கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும்.
ஜனாதிபதியிடம் சென்று புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நடத்தும் யோசனையை முன்வைத்துள்ளது.
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலும் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் என கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார். .