பாலநாதன் சதீஸ்
கொக்குத்தொடுவாய் பகுதியில் மின்கலம் வெடித்ததில் காயமடைந்த நால்வர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொக்குத்தொடுவாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தி வெலிஓயா செல்லும் வீதியில்
கன்னிவெடி அகற்றும் பிரிவினர் கன்னிவெடிகள் அகற்றும் பணிக்காக இன்றையதினம் (20.10.2023) காலை சென்றிருந்தனர். இதன்போது தமது பணிக்கு தேவையான மின்கலத்தினை (வெற்றறி) வைத்திருந்த போது வெற்றரி பெரும் வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதன்போது கன்னிவெடி அகற்றும் பணிக்காக வந்திருந்த ஊழியர் நால்வர் சிறு காயங்களுக்கு உள்ளாகி அசிற் உடலில் பட்டிருந்ததாலும் பரிசோதனை மேற்கொண்டு உடல்நிலையை பார்ப்பதற்காக உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான சிகிச்சையளித்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.