முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஸ்தாபிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இதற்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
சந்தேகநபருக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸார் முன்னதாக நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
கடந்த 2018ஆண்டு ஆடி மாதம் 2ஆம் திகதி யாழப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவைத் திட்டத்தின் எட்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,
“நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும்“ என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.