சாணக்கியன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் கதாநாயகனாக மாறிக்கொண்டிருக்கின்றார், சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு மாகாணம் என சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் பேசிய விடயத்தை எமது இந்நாட்டிலுள்ள 200க்கும் அதிகமான முதுகெலும்பு அற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையிலும் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை என அவர் கூறியுள்ளார்.
அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவரது முகநூல் பதிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த துறவிகளை மயிலத்தமடு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறுவதற்கு இவர் யார்? உழவு இயந்திரம் செல்லக்கூடாது, பௌத்த துறவிகள் செல்லக்கூடாது, சிங்கள மக்கள் செல்லக்கூடாது என்கின்ற இவர் தனியாக பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு மாகாணம்.
நாங்கள் அரச பாதுகாப்பு படை, புலனாய்வுத் துறையினர் சொல்லுவதையும் கேட்க வேண்டும் அரசியல்வாதிகள் சொல்வதையும் கேட்க வேண்டும் கல்விமான்கள் கூறுவதையும் கேட்க வேண்டும்.
ஆனால் சாணக்கியன் சிங்கள மக்களை துவேஷமாக பேசுவதையும் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா? இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் சூட்சமான முறையில் இந்த பிரச்சினையை நாங்கள் கையாள வேண்டும் என்று எங்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
பௌத்த துறவிகள் என்ற ரீதியில் இலங்கை அரச புலனாய்வுத் துறையினரின் பேச்சுக்களை நாங்கள் காது கொடுத்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் தொடர்ச்சியாக இந்த சாணக்கியன் என்கின்ற நபர் நாடாளுமன்றத்தில் கதாநாயகனாக மாறிக்கொண்டிருக்கின்றார்.
இவருக்கு இந்த பலத்தை கொடுத்தவர்கள் தமிழ் மக்கள் ஆகவே இந்த சிங்கள பௌத்த நாடு என்ற ரீதியில் பௌத்த துறவிகள் திபுலபத்தான மட்டக்களப்பில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்வதற்கு இது சாணக்கியனின் நாடா?
சாணக்கியனின் நடவடிக்கை தொடருமாக இருந்தால் வைக்கப்பட்ட புத்த சிலை அகற்றப்பட மாட்டாது விவசாயம் செய்கின்ற மக்கள் அகற்றப்பட மாட்டார்கள் தொடர்ச்சியாக இராசமாணிக்கம் ஜனாதிபதியை ஆசை வார்த்தைகள் காட்டி சிங்கள மக்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பாராக இருந்தால் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். என தெரிவித்துள்ளார்.