”நாட்டின் ஜனாதிபதியும் நாட்டில் இல்லை, பொலிஸ் மா அதிபரும் நாட்டில் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் விசனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக் கிழமை, மட்டக்களப்பு, மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கூட்டமொன்றை நடத்தியிருந்தார்.
அங்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகளை, மட்டக்களப்பு பொலிஸார் இதுவரை நடைமுறைப்படுத்த வில்லை. இந்த நிலையில், பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாதமை தொடர்பாக நாடாளுமன்றமேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
பொலிஸ் மா அதிபர் இல்லாமல் ஒரு நாடு எப்படி இயங்க முடியும்? மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி பணிப்புரை விடுத்தும், அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து நாம் யாரிடம் முறையிட முடியும்?
பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது ஜனாதிபதியா- அரசியலமைப்புச் சபையா என்பது எமது பிரச்சினைக் கிடையாது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் போன்று இன்று இடம்பெற்றால், யார் அதற்கு பொறுப்புக்கூறுவது? 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும்” இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.