இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு 7 தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டாக அனுப்பிவைப்பதற்கு உத்தேசித்துள்ள கடிதத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு அப்பால் அண்மையகாலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள், பௌத்த சிங்களமயமாக்கம், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படல் போன்ற சம்பவங்கள் தமிழ்மக்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம் குறித்து 7 தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து சர்வதேச சமூகத்துக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான நேரத்தை வழங்குமாறுகோரி இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகள் இணைந்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளன.
அதன்படி இக்கடிதம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளிக்கப்படுமென செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அக்கடிதத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் இன்னமும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இன்று கடிதம் கையளிக்கப்படும் சாத்தியமில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.