வட-கிழக்கில் ஹர்த்தால் ; நோகாத போராட்டங்களால் தமிழர்கள் சாதிக்கப்போவது என்ன?

Share

இந்த வருடத்தில் இரண்டாவது கடையடைப்பு போராட்டத்துக்கான (ஹர்த்தால்) ஏற்பாடுகளில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கிவரும் கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் மற்றும் நிலப் பறிப்பு, சிங்கள-பௌத்த மயமாக்கல், மேய்ச்சல் தரை விவகாரம் போன்ற விவகாரங்களுக்காக வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் இந்த கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (20) நடைபெறவுள்ள இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு வடக்கு-கிழக்கிலுள்ள சிவில் அமைப்புகள்,பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த 14 வருடங்களில் தமிழர் தேசம் பல நெருக்கடிகளையும், அடக்குமுறைகளையும்,அச்சுறுத்தல்களையும் சிங்கள கடும்போக்காளர்களாலும் அரசுகளாலும் எதிர்கொண்டுவந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் குறிப்பாக கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சியேற்ற காலத்துக்கு பின்னர் தமிழர் தேசம் மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கிறது.குறிப்பாக என்றுமில்லாத அளவுக்கு நில அபகரிப்புகள்,சிங்கள-பௌத்தமயமாக்கல், தமிழர்கள் மீதான அடாவடிகள்,அச்சுறுத்தல்கள் என நாளுக்கு நாள் மிக மோசமான ஒரு சூழலுக்குள் தமிழ் மக்கள் வாழவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தமிழ் மக்களும் தமிழர் தேசமும் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்து தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் முன்னரைவிட அதிகமாக வேலை செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் தலைமைகள் முன்னெடுக்கும் இந்த கடையடைப்பு போராட்டங்களோ அல்லது மனித சங்கிலி போராட்டங்களோ தமிழர் தேசத்தின் மீட்சிக்கு பொருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறான போராட்ட (எதிர்ப்பு) வடிவங்கள் புளித்துப்போனவை. இந்த போராட்ட வடிவங்கள் மிக மிக பழமையான போராட்டங்கள்.இவ்வாறான போராட்டங்களால் சிங்கள தேசத்தையோ சர்வதேச சமூகத்தையோ ஆட்டங்காண வைக்கமுடியும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

இன்றுள்ள தமிழ் தலைமைகள் ”நோகாமல்” வேலை பார்க்க முயற்சிப்பதாகவே இவ்வாறான போராட்டங்கள் வெளிக்காட்டுகின்றன. தமிழர்களுடைய கடந்த கால போராட்ட வடிவங்கள் எவ்வாறாக இருந்தது என்பதற்கு வரலாறுகள் பல எம்முன் இருக்கின்றன.

அந்த அடிப்படையில் சிங்கள தேசத்துக்கும் நோகாமல்,சர்வதேசத்துக்கும் நோகாமல் எங்களுக்கும் (தமிழ் தரப்புகள்) நோகாமல் ஒரு போராட்டத்துக்கு காலத்தையும் நேரத்தையும் செலவழிப்பதில் எந்த பயனும் இருப்பதாக தெரியவில்லை.

இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துகளை சர்வதேசத்தின் முன் கொண்டுசெல்வதற்கும் சிங்கள-பௌத்த பேரினவாதிகளுக்கு பெரும் தாக்கத்தினையும் சேதத்தினையும் ஏற்படுத்துவதான ஒரு போராட்ட வடிவமே தேவையாகும்.

அதற்கு ஒரு திரண்ட மக்கள் சக்தியாக வடக்கு-கிழக்கு மக்களை திரட்டும் தேவைப்பாடு தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு அவசியமாகும். அந்த திராணி அவர்களிடத்தில் இல்லையென்றால் பொது அமைப்புகள், புத்திஜீவிகள் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அதைவிடுத்து எவருக்குமே நோகாத போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டு இருப்போமேயானால் தமிழருக்கு எதிரான அநீதிகள்-ஆபத்துகள் மேலும் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.

ஆகவே அவசரமாக புதிய போராட்ட வடிவமொன்றுக்கு தமிழ் தலைமைகளும் தமிழ் மக்களும் தயாராவது தமிழருடைய இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு