தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்காமை என்பது ஒரு கலாசாரம். தமிழ் கலாசார பிராந்திய வாக்கு வங்கியில் பாரம்பரியம் முக்கிய காரணியாகக் காணப்படுகின்றது.
தமிழர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடைவில்லை. அடுத்த தலைமுறையினர் தேசிய அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள்.
எனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழர்களுடன் இணக்கமாகவே செற்படுகின்றார். தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மதிக்கிறார். அவற்றைப் பின்பற்றுகிறார்.
நாங்கள் நல்லூர் கோவிலுக்கும் செல்வோம். சகல இந்து மற்றும் ஏனைய மத ஸ்தலங்களுக்கும் செல்வோம். எனது தந்தை இந்தியாவுக்கு வருகை தந்தால் திருப்பதி ஆலயத்தை தரிசிக்காமல் செல்ல மாட்டார்.
இலங்கையில் வாழும் தமிழர்களை அரவணைத்துக் கொண்டு செயற்படுவதே எமது பிரதான நோக்கமாக உள்ளது.
இனம், மதம் மற்றும் மொழி என்பவற்றுக்கு அப்பாற்பட்டு இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.