மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மவ்பிம ஜனதா கட்சியின் புதிய தலைமையகம் நேற்று புதன்கிழமை கொழும்பு 08, பார்க் அவென்யூ, இலக்கம் 11 இல் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார மற்றும் கட்சியின் முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர,
“குறுகிய கால மற்றும் நீண்டகால பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைத்தன்மையை அடைவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அரசியல் அமைப்பைக் கோரும் இலங்கையர்களுக்கு மவ்பிம ஜனதா கட்சி ஒரு பாதையாக இருக்கும்.
அரசியல் வெளியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை மவ்பிம ஜனதா கட்சி நிரப்பும்.
குறுகிய காலத்தில், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் ஒரு நம்பிக்கையான திசையில் திருப்புவதற்கு விஞ்ஞானரீதியான பொருளாதார வேலைத்திட்டம் சமூகமயப்படுத்தப்பட வேண்டும்.
தவறான கருத்துகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்குப் பதிலாக இன்னும் உகந்த தீர்வுகள் விவாதிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக இளைஞர் சமூகம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதன் மூலம் நட்புறவான தொழில்முனைவோரை ஊக்குவிப்பது மற்றும் அந்நியச் செலாவணியை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்காக உழைக்க மவ்பிம ஜனதா கட்சி தயாராக உள்ளது“ என்றார்.