சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிலுள்ள சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே நாளில் யானை தாக்கி 4 இடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், இன்று (11) அதிகாலை தனியான் யானை ஒன்று வந்து சென்றதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் உள்நுழைந்த ஒரு காட்டுயானை அப்பிரதேசத்தில் உள்ள பயன் தரும் வாழை மற்றும் ஏனைய பயிர்களை சேதப்படுத்தியுள்ளதுடன், வீடுகளின் சுவர்களும் உடைக்கப்பட்டு, வீட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூடைகளும் நாசமடைந்துள்ளன.
இந்த வருடம் காட்டுயானை தாக்குதலுக்குள்ளாகி 3 நபர்கள் உயிரிழந்ததுடன், முதலை தாக்குதலுக்குள்ளாகி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பிரதேச தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.அஸாறுடீன் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேசத்துக்குள் நாளாந்தம் காட்டுயானைகள் இரவு வேளைகளில் நுழைந்து குடியிருப்பாளர்களுக்கும் பயிர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.