ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் கைகளில் கோப்பைகளை ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மையினரால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23 நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், இவ்வாறு கோப்பைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தியுள்ளனர்.
அத்துடன், தமது நிலங்களை தமக்கு வழங்குமாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ், தேசிய அமைப்பாளர் சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.
போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை சந்திவெளி பொலிஸார் மற்றும் ஏறாவூர் பிரதேச பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக போராட்டத்திற்கு எதிரான தடையுத்தரவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், பொலிஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், நீதிமன்ற கட்டளையினை இதுவரையில் நடைமுறைப்படுத்தாத பொலிஸார் அமைதியான முறையில் போராடிவரும் தமக்கு தடையுத்தரவு வழங்க முற்படுகிறதா என போராட்டக்காரர்களினால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்பான நீதிமன்ற கட்டளை வாசிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த சுவரில் பொலிஸாரினால் நீதிமன்ற கட்டளை ஒட்டப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அமைதியான முறையில் பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.