மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினரால் மட்டக்களப்பு நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாரம்பரிய மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு மாதவனை பகுதியை, விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக கூறப்படும் குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் குறித்த குழுவினரால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, தமது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரி கால்நடை வளர்ப்பாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டமானது இன்று 23ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றுமாறு கோரி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும், நாளைய தினம் மயிலத்தமடு மாதவனையை சேர்ந்த பண்ணையாளர்கள் நடத்தவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் நடத்திய போராட்டத்துக்கு தடை உத்தரவு விதிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இது ஒரு நாடு, இரு சட்டம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது குற்றஞ்சுமத்தியுள்ளார்.
.