வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம்(06) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார் என அறியமுடிகின்றது.
இந்நிலையில், மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் 22 நாட்களாக போராடி வருகின்றனர். தமது மேய்ச்சல் தரை அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வெளி மாவட்டங்களில் இருந்துவந்து அங்கு விவசாயம் செய்பவர்களை அகற்றுமாறு வலியுறுத்தியுமே அவர்கள் போராடி வருகின்றனர்.
அமைச்சர் ஒருவரின் வழிகாட்டலிலேயே வெளிமாவட்டங்களில் இருந்து வந்து அங்கு விவசாயம் செய்கின்றனர். அவர்களுக்கு விவசாயம் செய்ய வேண்டுமெனில் ஏதேனும் ஒரு காட்டு பகுதியில் சென்று, காட்டை வெட்டி அதனை செய்யலாம். மேய்ச்சல் தரை என்பதை புதிதாக உருவாக்க முடியாது. அதனை உருவாக்க பெரும்பாடுபட்டிருக்க வேண்டும்.
பொலிஸ் காவல் அரண் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், பிக்கு ஒருவர் குழப்பத்தில் ஈடுபட்டால், அவரை வணங்கிவிட்டு விசாரணைக்கு செல்பவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?
இப்பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என ஜனாதிபதி வாய்மூலம் உறுதியளித்துள்ளார். ஆனால் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களை அகற்றும்வரை பண்ணையாளர்களின் போராட்டம் தொடரும். ஜனாதிபதி மட்டக்களப்பு வருகின்றார் எனக் கூறப்படுகின்றது. அப்போது இதன் எதிர்விளைவு தெரியவரும்.
ஜனாதிபதி செயலகத்துக்கும் இது பற்றி அறிவித்துள்ளேன். மட்டக்களப்புக்கு வருவதற்கு முன்னர் நிவர்த்தி செய்துதருமாறு கோருகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் கால்நடைகளின் நலன் கருதியேனும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பை வெளியிடுவோம். முதல்தர பிரஜைக்குரிய கவனிப்பு அவருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.