திருகோணமலை – இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை தொடர்பில் ஊடகங்களுக்கு மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டாமென பொலிஸார் தெரிவித்தனர்.
விகாரையின் கட்டுமானங்களுக்கு இன்று (01) எதிராக மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு தடையுத்தரவு வழங்கியிருந்தது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த இருந்த போது பொலிஸார் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் எனவும், நீதிமன்ற தடையுத்தரவையும் ஒளி பெருக்கி மூலம் வாசித்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் எதிர்ப்பினை காட்ட முற்பட்ட போது தடுத்து நிறுத்தியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சமூக ஆர்வலரான வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் பொலிஸ் உயரதிகாரியால் தடுக்கப்பட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து அங்கு செய்தியாளர்களுக்கு குறித்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்த முட்பட்ட போது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரால் அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்காக அங்கு வருகை தந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.