தமிழகம் முழுவதும் முகாம்களிலும், வெளியிலும் வாழும் இலங்கைத் தமிழர்களின் குறுகிய கால மற்றும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு நீடித்து நிலைத்த தீர்வுகாண தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு தனது இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த அறிக்கையை முதல்வரிடம் குறித்த குழு சமர்ப்பித்தது.
மாநிலத்தில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான வழிகளை இடைக்கால அறிக்கை ஆராய்ந்து, இது தொடர்பாக சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகள் மற்றும் குடியுரிமைக்கான சட்டப் பாதைகள் குறித்த முக்கிய பரிந்துரைகள் இந்த இடைக்கால அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக முகாம்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்து, இது சம்பந்தமாக நீதித்துறையின் மதிப்பிட்டுகளுடன் இந்த பரிந்துரைகளை செய்துள்ளோம்” என ஆலோசனை குழுவின் சட்ட நிபுணர் மனுராஜ் சுண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
குழுவானது குடியுரிமைக்கான பாதைகள், தமிழ்நாட்டில் இந்திய சமூகத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதற்கான படிகள் மற்றும் திருப்பி அனுப்பும் படிமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இந்த அறிக்கை தமிழகத்தில் குடியுரிமையின்றி வாழும் இலங்கையில் இருந்து சென்ற 5,000 இற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.