நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசாரணை

Share

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரை சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை நடத்தி வந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான ரி.சரவணராஜா தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பதவி விலகியமை சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி இதற்கு முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் பொலிஸாரிடமோ அல்லது நீதி சேவைகள் ஆணைக்குழுவிடமோ அறிவிக்காத பின்னணியில், இந்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நீதித்துறை, சட்டம் மற்றும் பாதுகாப்பு துறையின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதவி விலகலுக்கான காரணங்களை கண்டறிந்து அதன் அறிக்கையை தனக்கு வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த சம்பவம் தொடர்பான நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.

நீதிபதி சரவணராஜா தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக இதற்கு முன்னர் எவ்வித முறைப்பாடுகளையும் செய்யவில்லை எனவும் கடந்த 23 ஆம் திகதி பதவி விலகல் கடிதத்தை நீதி சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்து விட்டு கடந்த 24 ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளதாகவும் இதன் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் நீதிபதி சரவணராஜா, சட்டமா அதிபர் சம்பந்தமாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஜனாதிபதி செயலாளர், சட்டமா அதிபரிடம் விசாரித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜாவை பிரதிவாதியாக குறிப்பிட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாகுமாறு நீதி சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக விடுத்த அழைப்புக்கு அமைய தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அவருடன் கலந்துரையாடியதாக சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூன்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் முன்னிலையில், முல்லைத்தீவு நீதிபதியுடன் சட்ட ரீதியான விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாகவும் நீதவான் ஒருவரை பிரதிவாதியாக பெயரிடுவது தவறானது என அறிவிப்பது தொடர்பாக பேசியதாகவும் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளரிடம் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் குருந்தூர்மலை விகாரை தொடர்பான வழக்கின் தீர்ப்பை திரும்ப பெறுமாறு சட்டமா அதிபர் கோரியதாகவும் அரசியல் ரீதியாகவும் அந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதி சரவணராஜா குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு