சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவரை ஆணியை விழுங்கச் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சவூதி அரேபிய தூதரகம் மற்றும் வைத்தியசாலைகளுடன் இணைந்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
மாத்தளை எல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சவூதி அரேபியாவில் தாம் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர்கள் இரும்பு ஆணிகளை பலவந்தமாக விழுங்க வைத்ததாகவும், அதில் ஒரு ஆணி இன்னும் தமது உடலில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடுமையான சுகவீனமுற்ற நிலையில் சவூதி அரேபிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், வைத்தியர் ஒருவரின் நேரடித் தலையீட்டினால் சில தினங்களுக்கு முன்னர் தூதரகம் ஊடாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது கண்டறியப்பட்டதுடன், இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு ஆணி அகற்றப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.