தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம்

Share

தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தமது போராட்டத்தின் வடிவினை மாற்றி தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவு ள்ளதுடன் அதற்கும் தீர்வில்லையென்றால் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்குகளினால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சென்றவர்கள் அவர்களுக்கு மாவட்ட மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான துணிவு இடுப்பில் இல்லாவிட்டால் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு தம்முடன் போராட வருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி நான்காவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்றைய தினம் தலையில் கறுப்பு துணியை அணிந்தவாறு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவசாய கூட்டத்தின் போது மேய்ச்சல் தரை அபகரிக்கப்படுவது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து தங்களது மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கை மீட்க வந்தவர்களே எங்கே சென்றீர்கள்?, அரசே மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்கு, காணிக்கொள்ளையர்களே மேய்ச்சல்தரையினை விற்றுவிட்டீர்களா?,அரசே மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரே மேய்ச்சல் தரை பிரச்சினை விளங்கவில்லையா போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.

தமது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நான்கு தினங்களாக போராடிவருகின்றபோதிலும் இதுவரையில் தமது கோரிக்கையினை தீர்த்துவைப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு தினங்களாக தமது வாழ்வாதாரத்தினை இழந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகளை தீர்த்துவைக்க எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள அரசாங்கம் சார் இராஜாங்க அமைச்சர்கள் தமது பிரச்சினையை தீர்ப்பதற்கு இடுப்பில் பலம் இல்லாதவர்களாகவுள்ளதாகவும் அவர்கள் தமது பதவியை விலகி தங்களுடன் போராடவருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமது நியாயமான போராட்டம் கவனத்தில் கொள்ளப்படவில்லையாயின் தமது போராட்டத்தினை தொடர்ந்து கடுமையான போராட்டமாக முன்கொண்டுசெல்லவேண்டிய நிலையேற்படும் எனவும் முதல் கட்டமாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும்,அதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லையென்றால் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தவேண்டிய நிலையேற்படும் எனவும் இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு