சேனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுக்களை நியமிப்பதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களைப் போன்று வீண் செயல் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
களுத்துறை புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான தரப்பினர் உயர் பதவிகளில் இருக்கும் போது எவ்வாறு சுயாதீன விசாரணைகளை நடத்த முடியும் என பேராயர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னதாக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு மிகவும் பாரதூரமான பொறுப்பு இருப்பதாக தெரிவுக்குழுவில் அறிக்கையின் 134 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கருதினால் தெரிவித்துள்ளார்.
குறித்த தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவர்கள் இன்னும் உயர் பதவிகளில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மேலும் குழுக்களை நியமிப்பதில் என்ன பயன் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.