முஸ்லிம் சமூகத்தின் எகோபித்த குரலாக, அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம். மறைந்த தலைவர் மர்ஹ{ம் அஷ்ரபின் அந்திமகால இதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக இன்றைய நினைவேந்தல் நிகழ்வை வரித்துக்கொள்வோம்.”
இவ்வாறு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
சாய்ந்தமருதில் பெரும் எழுச்சியுடனும், பெருமளவு மக்களின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 23 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதான நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் இணைந்த வடகிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் ஆரம்பத்தில் மர்ஹ{ம் அஷ்ரபின் நினைவாக கத்தமுல் குர்ஆன் ஓதிதமாம் செய்யப்பட்டதுடன், விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
நிகழ்வில் இந்திய தமிழ் நாடு பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.
கல்முனை மாநகர முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வில், தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம் நாட்டின் ஆட்சிக்கதிரைகள் பக்க மிருந்தாலும், எதிர் தரப்பிலிருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸேதானாகும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் தமது அந்திமகாலத்தில் முன்னெடுத்து விட்டுச் சென்ற விடயங்கள் பல உள்ளன.
முக்கியமாக அவர் அந்திம காலத்தில், கட்சியோடு முரண்பட்டிருந்தவர்கள் மற்றும் மாற்றுக்கட்சிகளில் இணைந்திருந்தவர்களை வீடுவீடாகச் சென்று சந்திப்புகளை நடத்தி முஸ்லிம்காங்கிரசுக்குள் உள்வாங்கும் முயற்சிகளைச் செய்து வெற்றியும் கண்டார்.
அந்த வகையில் வெளியிலுள்ளவர்களையும் நமது பாசறையில் இணைப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இதற்காக முஸ்லிம்காங்கிரஸின் கதவு இனிஎப்போதும் திறந்தேயிருக்கும்.எமது அரசியலைப் பொறுத்தவரை அஷ்ரபுக்கு முன்பும், பின்பும் என்றே எழுதப்படும்.
இந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்தி, சிறுமைப்படுத்தி சிதைத்துவிடும் எத்தகைய முயற்சிக்கும் இடமளிக்க முடியாது.
இருப்பினும் அனைவருக்கும் நியாயம் செய்யும் தலைவனாகவே கட்சியின் செயற்பாடுகளை நான் முன்னெடுத்து வருகின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸை தொடர்ந்தும் முஸ்லிம்கள் அனைவரதும் பாசறையாகவும், அரவணைக்கும் அரசியல் பாசறையாகவும் முன்கொண்டு செல்வோம்” என்றார்.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சிரேஷ்ட சட்த்தரணி நிஸாம் காரியப்பர், பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதிப் பொருளாளார் ஏ.சி.யஹியாகான் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.