“நான் மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது. என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளார் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“என் மீள் அரசியல் பயணத்தைப் பற்றி நான்தான் முடிவெடுக்க முடியும். அதில் வேறு எவரும் தலையிட முடியாது.
நான் நாட்டை விட்டு ஓடவில்லை; அரசியலுக்குப் பிரியாவிடை வழங்கவும் இல்லை. தற்போது ஓய்வில்தான் இருக்கின்றேன். நாட்டில் நடக்கும் விடயங்களை நாள்தோறும் அவதானித்து வருகின்றேன்.” – என்றார்.