பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலிகாமம் வடக்கு பலாலி கிராம மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து 1990 ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்து பல்வேறு இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
குறிப்பாக சின்னவளை, பொலிகண்டி, நிலவன், கே.கே.எஸ் மற்றும் ஆனைப்பந்தி ஆகிய ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் கடந்த 33 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் தொடர்ந்தும் மனிதநேய அமைப்புக்களின் உதவியுடன் தொடர் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வந்த நிலையில், 33 வருடங்களுக்கு பின்னர் பலாலி வடக்கு (J/254) கிராம அலுவலர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட அரச காணியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
ஐந்து முகாம்களில் 49 குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் 45 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய நான்கு குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 45 குடும்பங்களுக்கும் பதிமூன்றரை ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இந்து கோவிலுக்கு பத்து பரப்பு காணியும், பாடசாலைக்கென இரண்டு ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ஒரு குடும்பத்திற்கு தலா இரண்டு பரப்பளவு காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இப்பிரதேச மக்கள் தெரிவிக்கையில்,
“மெசிடோ நிறுவனத்தின் உதவியுடனும் ஒத்துழைப்போடும் தாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டங்களின் பலனாகவே தமக்கு இக்காணி கிடைத்தது.
இருப்பினும் தமது பூர்வீக காணிகள் இதுவரையில் விடுவிக்கப்படவிலை என்றும், அக்காணிகள் படையினர் வசம் உள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் 33 வருடங்ளாக முகாம்களில் தாங்கள் பட்ட துயரங்களில் இருந்து வெளியேர வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்காணிகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தோம்.
தற்போது மீள் குடியேற்றத்துக்கு என வழங்கப்பட்டுள்ள குறித்த காணியானது மேய்ச்சல் தரை காணியாக உள்ளது. மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கக்கூடிய நிலை காணப்படுகின்றது.
இக்காணியானது மக்கள் வசிப்பதற்கு உகந்தது இல்லை. இதற்கு முன்னர் இக்காணியில் எவரும் வசிக்கவில்லை. மக்கள் பயன்பாடின்றி மேய்ச்சல் நிலமாகவுள்ள காணியையே எமக்கு வழங்கியுள்ளனர்.
குறித்த காணிகளுக்கு சுற்று வேலி அமைத்து ,தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்படல் வேண்டும். குடிநீர் வசதி, மலசலக்கூட வசதி மற்றும் மின்சார வசதிகள் என்பன உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களினால் உடனடியாக குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. அதற்கான உதவிகளை அரசாங்கத்திடம் இருந்தும் அரச சார்பற்ற அமைப்புகளிடம் இருந்தும் எதிர்பார்க்கின்றோம்.
எனினும் எதிர்காலத்தில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதே தமது இலக்காக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளனர்.