இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘Nireekshak’ என்ற போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகைத்தை வந்தடைந்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை ‘Nireekshak’ போர் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், எதிர்வரும் 21ஆம் திகதிவரை கப்பல் இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.
‘Nireekshak’ கப்பலானது 70.5 மீட்டர் நீளம் கொண்டதுடன், இதில் 137 கடற்படையினர் வருகைதந்துள்ளனர்.
கப்பலின் தளபதி சி.டி.ஆர் ஜீது சிங் சௌஹான் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்புமொன்று நேற்று இடம்பெற்றது.
இக்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் கடற்படையினருடன் இணைந்து பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதுடன், திருகோணமலை மக்களுக்கான மருத்துவ முகாம்களையும் நடந்த உள்ளனர்.
இதேவேளை, ‘Shi Yan 6’ எனும் சீன ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
தற்போது இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் , ‘Shi Yan 6’ ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
‘Shi Yan 6’ கடல்சார் ஆய்வு கப்பல் இலங்கையில் நங்கூரமிடுவதற்கு சீனா அனுமதி கோரியிருந்த நிலையில் அதற்கும் இலங்கையும் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த கப்பல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் நங்கூரமிடப்படவும் உள்ளது.
சீன ஆய்வு கப்பலின் வருகைக்கு முன்னதாக இந்தியாவின் ‘Nireekshak’ இலங்கைக்கு வந்துள்ளமை சர்வதேச நாடுகள் உற்று நோக்கியுள்ளதுடன், இலங்கைக்கு இதன்மூலம் இந்தியா பல்வேறு செய்திகளை சொல்ல முற்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
‘Shi Yan 6’ கப்பலின் வருகைக்கு முன்னர் இந்தியா மேலும் சில நடவடிக்கைகளை இலங்கையில் முன்னெடுக்க கூடும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.