பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இடையிலான கலந்துரையாடலாகவே இது இடம்பெற்றதுடன், பல மணித்தியாலங்கள் பிரதமரும் பஸில் ராஜபக்ஷவும் நாட்டின் நிலைமை குறித்து ஆலோசித்துள்ளனர்.
அடுத்த ஆண்டுகான வரவு – செலவுத் திட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் நலன் மற்றும் நிவாரணங்களுக்காக அதிகளவிலான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் அதிக நிவாரணங்களை வழங்க முன்மொழிந்துள்ளமை தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் கருத்துகளை இருவரும் பரிமாறிக்கொண்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கூட்டணி அரசியலின் பங்களிப்புகள், பொது நல வசதிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சுமை மற்றும் நிவாரணம், பொது நிறுவன முடிவுகளை எடுப்பதில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல், நிறுவன மறுசீரமைப்பு பிரச்சினைகள், ஊழியர் உரிமைகள், நலன் மற்றும் மானியம், சுகாதார சேவையில் உள்ள பிரச்சினைகள், போதைப்பொருள் பிரச்சினை, தேர்தல் முறைமை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என இரு தரப்பு பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, காமினி லொகுகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, சஞ்சீவ எதிரிமான்ன, பிரதமரின் செயலாளர் சட்டத்தரணி திஸ்ஸ ஜயவர்தன யாப்பா, பிரதிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன உட்பட பல முக்கியஸ்தர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.