“எமது மாவட்டத்திலும் (மாத்தறை) தோட்டப் புறங்களில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. தோட்ட அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார்கள். ஆகவே, இப்பிரச்சினைகள் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள்.”
– இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பதிரணவிடம் சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று, மாத்தளை – ரத்வத்த தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பு ஒன்றை அந்தத் தோட்டத்தின் உதவி முகாமையாளர் பலவந்தமான முறையில் அகற்றிய சம்பவம் தொடர்பில் விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரமேஷ் பத்திரண விசேட உரையாற்றினார். அமைச்சரின் உரையைத் தொடர்ந்து சபாநாயகர் மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தார்.
சபாநாயகர் மேலும் தெரிவித்ததாவது:-
“இவ்வாறான பிரச்சினைகள் எமது மாவட்டத்திலும் (மாத்தறை) இடம்பெறுகின்றன. தோட்ட அதிகாரிகள் தன்னிச்சையான முறையில் செயற்படுகின்றார்கள். அவர்கள் தோட்ட மக்களை இருக்க விடுவதில்லை. மின்சாரம், நீர் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஆகவே, எமது மாவட்டத்தில் உள்ள தோட்ட புற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள்.” – என்றார்.