குருந்தூர்மலையில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு பக்திப் பொங்கல்!

Share

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் அழிக்கப்பட்ட ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டிடத்தில் இன்று கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பொங்கல் விழாவைக் குழப்பியடிக்க முயன்ற ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்குவையும் தமிழர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

குறித்த பொங்கல் நிகழ்வுக்குப் பௌத்த பிக்குகள் மற்றும் யாழில் இயங்கும் அருண் சித்தார்த் கும்பல் இடையூறு விளைவிக்கலாமென்பதால், பொங்கலுக்குப் பொலிஸார் தடையுத்தரவு கோரியிருந்தனர். எனினும், அதற்கு இணங்காத முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம், அந்தத் தரப்பினரிடம் இருந்து பிரச்சினை எதுவும் வாராதபடி கட்டளையும் பிறப்பித்திருந்தது.

இன்றைய பொங்கல் நிகழ்வு, தொல்லியல் திணைக்களம் பிறப்பித்த கடுமையான கட்டுப்பாடுகளின்படி நடைபெற்றது. நிலத்தில் கல் வைத்து, அதன் மேல் தகரம் வைத்து, அதன் மேல் அடுப்பு அமைக்கப்பட்டு பொங்கப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், தனியாகப் பொங்கல் செய்வதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருந்தனர். அவர்கள் இன்னொரு அடுப்பு அமைக்க முற்பட்ட போது, தொல்பொருள் திணைக்களம் அதற்கு அனுமதியளிக்கவில்லை. எத்தனை அடுப்பு அமைக்கலாம் என நீதிமன்றக் கட்டளையெதுவும் பிறப்பிக்கப்படாத போதிலும், ஒரு அடுப்பிலேயே பொங்க தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியது.

அதனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும், தொல்லியல் திணைக்களத்தினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

தமிழர்கள் அமைதியாகப் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அந்தப் பகுதிக்குள் ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார். இதனால் அங்கு சில நிமிடங்கள் பதற்ற நிலை ஏற்பட்டது.

எனினும், குறித்த பௌத்த பிக்குவுக்கு எதிராகப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழர்கள் கோஷமிட்டு அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அவர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கினர்.

தமிழர்களும் அங்கு அமைதியாகப் பொங்கல் விழாவை நடத்திவிட்டு அங்கிருந்து திரும்பினர்.

இதேவேளை, நேற்று இரவும் இன்று காலையும் குருந்தூர்மலையிலுள்ள ‘குருந்தி விகாரை’க்குத் தென்னிலங்கையில் இருந்து வாகனங்களில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

https://youtu.be/291Ca8bZ2Dw

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு