“மாகாண சபை முறையிலுள்ள ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. அதற்கு இடமளித்தால் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும்.”
– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது மட்டுமல்ல அதற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிர்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கான நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.
13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்த நாட்டில் இருந்த ஏழு ஜனாதிபதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது. மாகாணத்துக்கு இறைமையைப் பகிரவே இங்கு முயற்சி இடம்பெறுகின்றது. ஒத்திசைவு பட்டியல் நீக்கப்பட்டு, முழுமையாக அதிகாரங்களைப் பகிர்ந்தால் ஒற்றையாட்சியைக் காக்க முடியாது.” – என்றார்.