மலையகத் தமிழருக்குத் தேவை நியாயமே! – இந்தியாவைப் பின்பற்றி பிரிட்டனும் எமக்கு உதவ வேண்டும் என்று மனோ கோரிக்கை

Share
“மலையகத் தமிழ் மக்கள் இன்று வேண்டுவது எவரதும் அனுதாபங்கள் அல்ல. எமக்குத் தேவை நியாயம். இன்றைய இந்திய அரசு இதை உணர்ந்துள்ளது. இந்தியாவைப் பின்பற்றி பிரிட்டனும் எமக்கு உதவ வேண்டும்” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் முழுநாள் மலையகப் பெருந்தோட்ட மக்கள் தொடர்பான பிரேரணையை இன்று  (10) சமர்ப்பித்து ஆரம்ப உரை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது மக்கள் மத்தியில் நிலவும் நவீன அடிமைத்துவ நிலைமைக்கு இலங்கையை மாறி, மாறி ஆண்ட இனவாத அரசுகள்,  இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவை பொறுப்பேற்க வேண்டும். இங்கு நிலவும் பெருந்தோட்ட “துரைமார் – அடிமைத்தனம்” ஒழிய வேண்டும். இனியும் பொறுக்க முடியாது. எங்களை “இரத்த தேநீர்” என “சிலோன் டீ”க்கு எதிராக பிரசாரம் செய்யும் நிலைக்குத் தள்ள வேண்டாம் என எச்சரிக்கின்றேன். இந்த நவீன அடிமைத்தனம் இனி முடிவுக்கு வர வேண்டும். இதற்காக மலையகத் தமிழ் மக்கள் இன்று வேண்டுவது எவரதும் அனுதாபங்கள் அல்ல. எமக்குத் தேவை நியாயம்.

இன்றைய இந்திய அரசு இதை உணர்ந்துள்ளது. ஆகவே எமது மக்களின் நல்வாழ்வுக்காக, முதற்கட்டமாக 300 கோடி இலங்கை ரூபாய்களை பிரதமர் நரேந்திர மோடி நன்கொடையாக ஒதுக்கித் தந்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியாவுக்கு நன்றி. இனி இந்தியாவைப் பின்பற்றி பிரிட்டிஷ் அரசும் ஸ்டேர்லிங் பவுன்ட்ஸ்களை  எமக்காக ஒதுக்கித் தர வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தபடி, மலையக மக்களின் அதிக வாக்குகளைப்  பெற்ற கட்சியின் தலைவன் என்ற முறையில் நான் கோருகின்றேன். இந்தக் கோரிக்கையை இலங்கையில் உள்ள ஐக்கிய இராச்சிய தூதுவர் லிசா வன்ஸ்டல் இலண்டனில் உள்ள தனது அரசுக்குக் கொண்டு செல்வார் என நம்புகின்றேன்.

முன்னைய மற்றும் சமீபத்தைய கணக்கீடுகள் மற்றும் அறிக்கைகளில்  இலங்கை மத்திய வங்கி, உலக வங்கி, ஐநா உலக உணவுத் திட்டம், ஐ.நா. உணவு விவசாய நிறுவனம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், நவீன அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் டோமாயோ ஒபகடா ஆகியோர், பெருந்தோட்ட வதிவாளர்களை ஒதுக்கப்பட்ட, நலிந்த, உரிமையற்ற சமூகமாக அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் இன்றைய பொருளாதார நெருக்கடி இந்தப் பிரிவினரை, வறுமை, உணவு பாதுகாப்பிமின்மை, போசாக்கின்மை ஆகிய துறைகளில் மேலும் மோசமான மட்டங்களுக்கு தள்ளியுள்ளது.

மலையகத் தமிழ் இலங்கையர் சமூகத்துக்குள் வரும் பெருந்தோட்டப் பிரிவினர், இலங்கையில், 1823இல் முதல் இன்று வரை 200 வருடங்களை நிறைவு செய்துள்ளனர். பெருந்தோட்ட மக்களின் வாழ்வு, ஏறக்குறைய ஒரே மாதிரியாக மாறாமல், முதலாம் 125 வருட பிரிட்டிஷ் ஆட்சி,  இரண்டாம் 24 வருட பிரித்தானிய முடியாட்சி கீழான சுதந்திர இலங்கை ஆட்சி, மூன்றாம் 51 வருட இலங்கை குடியரசு ஆட்சி, ஆகிய மூன்று யுகங்களிலும் இருக்கின்றது.

இப்போது தெரிகின்ற ஒரே மாற்றம், வெள்ளை பிரிட்டிஷ் ராஜ்யத்தில் இருந்து, மாநிற பெருந்தோட்ட இராஜ்யத்துக்கு மாறியதுதான். இது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் நிலவும் வெட்கங்கெட்ட நவீன அடிமைத்துவம்.

பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் நலிவடைந்த பிரிவினராக மானிட வளர்ச்சியின் அனைத்துப் புள்ளி விபரங்களிலும் நாட்டின் ஏனைய மக்களை விட மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இலங்கை பெருந்தோட்டங்களில் நிலவும் நவீன அடிமைத்துவம் இந்த மக்களை, மனிதாபிமானமற்ற தாழ்நிலை வாழ்நிலைமைகள், அரைகுறை சுகாதார பாதுகாப்பு, போஷாக்கின்மை, மோசமான சிசு, கர்பிணி மரணம், வறுமை, பெண்களின் மீதான அதி மோசமான சுமை, சிறுவர் தொழில், மோசமான பணி நிலைமைகள், குறைந்த சம்பளத்துடன் அதிக நேர வேலை, பாலியல் தொந்தரவு, உடல்ரீதியான மற்றும் வாய்மொழி தாக்குதல் ஆகியவற்றடன் கூடிய வீட்டு வேலை,  சுரண்டல் மற்றும் பாரபட்சம், பெருநிறுவன தோட்டங்களில், அரச தோட்டங்களில், தனியார் சிறு தோட்டங்களில் நியாயமற்ற தினக்கூலி முறைமை, தோட்ட நிர்வாகங்களின் ஒடுக்குமுறைக்கு துணை போகும் பொலிஸ் அதிகாரிகள், சமமற்ற கல்வி வாய்ப்புகள், தரமற்ற கல்வி, பாடசாலைகளிருந்து மாணவர் இடை விலகல், சட்ட நீதியை பெரும் வாய்ப்பின்மை, மொழி உரிமையின்மை, வாழ்வதற்கும், வாழ்வாதாரத்துக்கும் நாட்டின் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் காணி உரிமை பெருந்தோட்ட மக்களுக்கு மறுக்கப்படுவது ஆகிய கொடுமைகளுடன்  வாழ வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.

மலையகத் தமிழ் இலங்கையர் சமூகத்துக்குள் வரும் பெருந்தோட்டப் பிரிவினரின் சமூக பொருளாதார அந்தஸ்துகளை உயர்த்த, பெளத்த போதனைகள், விசேட ஒதுக்கீட்டு கொள்கைகள் அடிப்படையில், இன மற்றும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் கரங்கோர்க்குமாறு, இம்மக்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் என்ற முறையில், அரசையும், சகோதர மக்கள் பிரதிநிதிகளையும் நாம் கோருகின்றோம்.

அனுதாபங்களையல்ல, நியாயத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படும்  இலங்கையின் முழுமையான பிரஜைகளாவதையே நாம் எதிர்பார்க்கிறோம்.

பெருந்தோட்ட குடியிருப்புகள், இலங்கை தேசிய பொது நிர்வாக கட்டமைப்புகளுக்குள் கொண்டு வரப்பட்டு, போதுமான  கிராம சேவையாளர் பிரிவுகளும், பிரதேச செயலக பிரிவுகளும், உருவாக்கப்பட்டு, நாட்டின் ஏனைய கிராமிய பிரதேச மக்களுக்கு இணையாக, பன்முகப்படுத்தபட்ட அரச சேவைகள் மற்றும் நலன்புரி சேவைக்களை பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தி, பெருந்தோட்ட நிர்வாகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து விடுபட்டு, முழுமையான பிரஜைகள் என்ற அந்தஸ்து  கிராமிய, பிரதேச செயலக, மாவட்ட மட்டங்களில் உருவாக வேண்டும் என நாம் கோருகின்றோம்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் நடப்பில் உள்ள ஜனத்தொகை  விகிதாசாரத்தை போன்று பெருந்தோட்ட பிரதேசங்களிலும் புதிய பிரதேச சபைகளை நிர்ணயம் செய்து உருவாக்கப்பட வேண்டும் எனவும் நாம் கோருகின்றோம்.” – என்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு