மலையக எழுச்சிப் பயணத்துக்கு சர்வதேச அமைப்புகள் பேராதரவு!

Share

மலையகச் சமூகத்தினருக்குக் காணி உள்ளிட்ட ஏனைய சம உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான மலையக எழுச்சிப் பயணத்தில் பங்கேற்கும் மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சமூகத் தலைவர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுடன் ஒன்றிணைவதாகவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம், சிவிக்கஸ் மற்றும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பான FrontLine Defenders ஆகிய அமைப்புகளே மலையக எழுச்சி நடைப் பயணத்தில் ஒன்றிணைவதாகக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில், 1823ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிக்காகத் தென்னிந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டபோது, உயிர் அச்சுறுத்தலான ஆபத்துக்களைத் சமாளித்துகொண்டு, காடுகளை அழித்தல், காட்டு விலங்குகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பெரும் சிரமங்களுக்கும் தொழிலாளர்கள் முகங்கொடுத்தனர். இப்பயணத்தின்போது குறிப்பிடத்தக்களவு மக்கள் உயிரிழந்தனர்.

200 வருடங்கள் கடந்தும் இவர்கள் அமைப்பு ரீதியான பாகுபாடு உள்ளிட்டவற்றுக்கு முகங்கொடுப்பதோடு இவர்களது சம உரிமை மறுக்கப்படுவதாகவும் சர்வதேச அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மலையக சமூகத்தின் சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்கான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி பயணத்தை மேற்கொண்ட தொழிலாளர்களையும் அவர்களின் போராட்டத்தையும் நினைவு கூருவதே இந்த நடைபயணத்தின் நோக்கமாகும்.

அத்துடன், இந்தச் சமூகத்தின் பங்களிப்புகள், சாதனைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவாலான மற்றும் பல தலைமுறைகளாக அனுபவிக்கும் கட்டமைப்பு வன்முறைகள் ஆகியவற்றை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மலையக சமூகம் இலங்கையில் மிகவும் நலிவடைந்த, வரலாற்று ரீதியாக குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு கட்டாய நாடு கடத்தல் மற்றும் நாடற்ற நிலை ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மலையகச் சமூகத்தினருக்குக் காணி, குடியிருப்பு, வாழ்வாதாரம், நியாயமான ஊதியம், கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அரச சேவைகளில் சம உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.

அங்கீகாரம் மற்றும் சமத்துவத்துக்கான சமூகப் போராட்டம் தொடர்வதுடன், காலனித்துவம் மற்றும் அடிமைத்தனத்தில் வேரூன்றிய பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படல் ஆகியன மலையக மக்களின் வாழ்க்கையைத் தற்போதும் பாதிப்புக்குள்ளாக்குவதாகவும் சர்வதேச அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு