தனிமையில் சென்ற கோட்டா இறுதியில் வீழ்ந்தார் படுகுழியில்! – சாகர வெளிப்படைக் கருத்து

Share

“கோட்டாபய ராஜபக்சவை நாங்கள் தனிமைப்படுத்தவில்லை. ராஜபக்சக்களிடமிருந்து விலகி தனித்து செயற்படுவதாகக் காண்பிப்பதற்காக அவர் தன்னைச் சுய தனிமைப்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுன அரசைக் கடுமையாக விமர்சித்தவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

“தேசிய பாதுகாப்பு,தேசியம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 69 இலட்சம் மக்கள் கோட்டாபய ராஜபக்சவைத் தலைவராகத் தெரிவு செய்தார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் 69 இலட்சம் மக்கள் ஆணையைப் பாதுகாக்கவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, 69 இலட்சம் மக்கள் ஆணை என்பன பலவீனமடையக் கூடாது என்பதற்காகவே அரசமைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் நாட்டில் உண்ண உணவு இல்லாமல் எவரும் நெருக்கடிக்குள்ளாகவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள், எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசைப் பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் எமது அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள்.

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு, மின்விநியோகத் துண்டிப்பு ஆகிய காரணிகளால் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டது. பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக ராஜபக்சக்களிடமிருந்தும், பொதுஜன பெரமுனவில் இருந்தும் தனித்துச் செயற்படுவதாக மக்களுக்குக் காண்பிக்கும் வகையில் தனித்துச் செயற்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்த விஜயதாஸ ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்கிரமநாயக்க, ரொஷான் ரணசிங்க ஆகியோரை இறுதிக்கட்டத்தில் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் பஸில் ராஜபக்சவை நிதி அமைச்சர் பதவியில் இருந்தும், மஹிந்த ராஜபக்சவைப் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுமாறு கோட்டபய ராஜபக்ச வலியுறுத்தினார்.

நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்து அவர்கள் பதவி விலகினார்கள். கடந்த வருடம் ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள்.

நெருக்கடியான நிலையில் பஸில் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே அவரைப் பாதுகாத்தார்கள். ஆகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு