யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன் அதனை அளவீடு செய்யும் முயற்சி கடும் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
முள்ளியான் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட (ஜே/433) கட்டைக்காடு பகுதியில் கடற்படை முகாம் அமைந்திருக்கும் ஒன்றரைப் பரப்புக் காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று (24) காலை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அங்கு ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதையடுத்து காணி அளவீடும் பணி தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.