பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை வவுனியா – தோணிக்கல் பகுதியில் பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த யுவதி ஓமந்தையைச் சேர்ந்த 21 வயதுடையவர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்களில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுவன், 7 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 4 பெண்கள் மற்றும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஓமந்தையைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு இன்று அதிகாலை தொலைபேசியூடாகத் தகவல் கிடைத்தது.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், வவுனியா நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது மேற்படி வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
முகமூடி அணிந்த கும்பல் வந்து வீட்டுக்குத் தீ வைத்தது சிசிரிவி காட்சிகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=vg1yeUWqUUY